சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=n2pq1VKybbE
5.090   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாசு இல் வீணையும், மாலை
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=J7MfBAIcQ04
5.091   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஏ இலானை, என் இச்சை
பண் - திருக்குறுந்தொகை   (பொது -தனித் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=XxaVOKR-ShI

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.089   ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -தனித் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
ஒன்று கீள் உமையோடும் உடுத்தது-
ஒன்று வெண்தலை ஏந்தி, எம் உள்ளத்தே
ஒன்றி நின்று, அங்கு உறையும் ஒருவனே.

[1]
இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன செய்தொழில்;
இரண்டும் ஆம், அவர்க்கு உள்ளன கோலங்கள்;
இரண்டும் இல் இளமான்; எமை ஆள் உகந்து,
இரண்டு போதும் என் சிந்தையுள் வைகுமே.

[2]
மூன்று மூர்த்தியுள் நின்று, இயலும் தொழில்
மூன்றும் ஆயின; மூ இலைச் சூலத்தன்;
மூன்று கண்ணினன்; தீத்தொழில் மூன்றினன்;
மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே.

[3]
நாலின்மேல் முகம் செற்றதும்; மன் நிழல்
நாலு நன்கு உணர்ந்திட்டதும்; இன்பம் ஆம்
நாலுவேதம்,-சரித்ததும்,-நன்நெறி
நாலுபோல்-எம் அகத்து உறை நாதனே.

[4]
அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி, அரைமிசை
அஞ்சுபோல் அரவு ஆர்த்தது, இன் தத்துவம்
அஞ்சும், அஞ்சும், ஓர் ஓர் அஞ்சும், ஆயவன்;
அஞ்சும் ஆம்-எம் அகத்து உறை ஆதியே.

[5]
ஆறுகால் வண்டு மூசிய கொன்றையான்;
ஆறு சூடிய அண்ட முதல்வனார்;
ஆறு கூர்மையர்க்கு அச் சமயப் பொருள்
ஆறுபோல்-எம் அகத்து உறை ஆதியே.

[6]
ஏழு மா மலை, ஏழ்பொழில், சூழ் கடல்-
ஏழு, போற்றும் இராவணன் கைந்நரம்பு-
ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன்கழல்,
ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே.

[7]
எட்டுமூர்த்தியாய் நின்று இயலும் தொழில்,
எட்டு வான் குணத்து, ஈசன் எம்மான்தனை
எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே;
எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே.

[8]
ஒன்பது ஒன்பது-யானை, ஒளி களிறு;
ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே,
ஒன்பது ஆம் அவை தீத் தொழிலின்(ன்) உரை;
ஒன்பது ஒத்து நின்று என் உள் ஒடுங்குமே.

[9]
பத்து-நூறவன், வெங் கண் வெள் ஏற்று அண்ணல்;
பத்து-நூறு, அவன் பல்சடை தோள்மிசை;
பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்
பத்தியான் இடம் கொண்டது பள்ளியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.090   மாசு இல் வீணையும், மாலை  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -தனித் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சாரவேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான். திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்த போது, அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுபடுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தங்களது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார். இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார்.
மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும்,
மூசு வண்டு அறை பொய்கையும், போன்றதே-
ஈசன், எந்தை, இணைஅடி நீழலே.

[1]
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;
நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;
நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே.

[2]
ஆள் ஆகார்; ஆள் ஆனாரை அடைந்து உய்யார்;
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்;
தோளாத(ச்) சுரையோ, தொழும்பர் செவி?
வாளா மாய்ந்து மண் ஆகிக் கழிவரே!

[3]
நடலை வாழ்வுகொண்டு என் செய்திர்? நாண் இலீர்?
சுடலை சேர்வது சொல் பிரமாணமே;
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்,
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே!

[4]
பூக் கைக் கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்;
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;
ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து,
காக்கைக்கே இரை ஆகி, கழிவரே!

[5]
குறிகளும்(ம்), அடையாளமும், கோயிலும்,
நெறிகளும்(ம்), அவர் நின்றது ஓர் நேர்மையும்,
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்,
பொறி இலீர்! மனம் என்கொல், புகாததே?

[6]
வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும்,
தாழ்த்தச் சென்னியும், தந்த தலைவனைச்
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே!

[7]
எழுது பாவை நல்லார் திறம் விட்டு, நான்,
தொழுது போற்றி, நின்றேனையும் சூழ்ந்து கொண்டு,
உழுத சால்வழியே உழுவான் பொருட்டு
இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே!

[8]
நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன் ஆர் சடைப் புண்ணியன்,
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
நக்கு நிற்பவர், அவர்தம்மை நாணியே.

[9]
விறகில்-தீயினன், பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன்மா மணிச்சோதியான்;
உறவுகோல் நட்டு, உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.091   ஏ இலானை, என் இச்சை  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -தனித் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஏ இலானை, என் இச்சை அகம்படிக்-
கோயிலானை, குணப் பெருங்குன்றினை,
வாயிலானை, மனோன்மணியைப் பெற்ற
தாய் இலானை, தழுவும், என் ஆவியே.

[1]
முன்னை ஞான முதல்-தனி வித்தினை;
பின்னை ஞானப் பிறங்கு சடையனை;
என்னை ஞானத்து, இருள் அறுத்து, ஆண்டவன்
தன்னை; ஞானத்தளை இட்டு வைப்பனே.

[2]
ஞானத்தால்-தொழுவார், சிலஞானிகள்;
ஞானத்தால்-தொழுவேன், உனை நான், அலேன்;
ஞானத்தால்-தொழுவார்கள் தொழ, கண்டு,
ஞானத்தால் உனை, நானும் தொழுவனே.

[3]
புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும்(ம்) அதே;
புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை;
புழுவினும் கடையேன் புனிதன் தமர்-
குழுவுக்கு எவ்விடத்தேன், சென்று கூடவே?

[4]
மலையே வந்து விழினும், மனிதர்காள்!
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரே?
தலைவன் ஆகிய ஈசன் தமர்களை,
கொலை செய் யானைதான், கொன்றிடுகிற்குமே?

[5]
கற்றுக் கொள்வன வாய் உள, நா உள;
இட்டுக் கொள்வன பூ உள; நீர் உள;
கற்றைச் செஞ்சடையான் உளன்; நாம் உளோம்;
எற்றுக்கோ, நமனால் முனிவுண்பதே?

[6]
மனிதர்காள்! இங்கே வம்! ஒன்று சொல்லுகேன்;
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே?
புனிதன், பொன்கழல் ஈசன், எனும் கனி
இனிது சாலவும், ஏசற்றவர்கட்கே.

[7]
என்னை ஏதும் அறிந்திலன், எம்பிரான்;
தன்னை, நானும் முன், ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன் அடியான் என்று அறிதலும்,
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே.

[8]
தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பது ஓர்
உள்ளத் தேறல்; அமுத ஒளி; வெளி;
கள்ளத்தேன், கடியேன், கவலைக்கடல்-
வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே?

[9]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list